ஆத்தூரில், தாறுமாறாக ஓடி தொடர் விபத்தை ஏற்படுத்திய காரை சூறையாடிய பொதுமக்கள்


ஆத்தூரில், தாறுமாறாக ஓடி தொடர் விபத்தை ஏற்படுத்திய காரை சூறையாடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Feb 2021 1:53 AM GMT (Updated: 2021-02-18T07:34:00+05:30)

தாறுமாறாக ஓடி தொடர் விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் சூறையாடினர். மேலும் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

ஆத்தூர்,


சேலம் மேட்டுப்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் சரவணன் (வயது 36). இவர் சேலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தொழில் அதிபரை சென்னைக்கு கொண்டு சென்று விட்டார். 

பின்னர் சரவணன் அங்கிருந்து ஆத்தூர் வழியாக சேலம் நோக்கி காரை ஓட்டி வந்தார். அவர் வழியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் அவர் காரை ஓட்டி வந்த போது சாலையோரம் நடந்து சென்ற 2 பேர் மீது மோதுவது போல் வண்டியை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விநாயகபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. 

தாறுமாறாக ஓடிய கார்

தொடர்ந்து தாறுமாறாக ஓடிய இந்த கார், நரசிங்கபுரம் ஆற்றுப்பாலம் அருகே ஆத்தூரை சேர்ந்த செங்கோட்டுவேல் (38), கண்ணன் (36) ஆகிய இருவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பாலத்தை தாண்டி சிறிது தூரம் சென்ற அந்த கார், கல்பகனூர் கிராமத்தை சேர்ந்த மொட்டையன் (65) என்பவரின் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதையடுத்து அந்த கார், ஆத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் வேகமாக சென்று உடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கொடிக்கம்பத்தின் அருகே உள்ள திட்டில் மோதியது. இதில் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மணிகண்டன் (26). மற்றொரு மணிகண்டன் (28) ஆகியோர் மீது கார் மோதியதுடன், திட்டில் மோதி நின்றது. 

டிரைவருக்கு தர்ம அடி

உடனே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சேர்ந்து கார் டிரைவர் சரவணனை காரில் இருந்து இறக்கி சரமாரியாக அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கினர். காரின் உள்ளே மதுபாட்டில் இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சரவணனை மீட்டுச் சென்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
5 பேர் மீது கார் அடுத்தடுத்து மோதிய சம்பவத்தால் ஆத்தூர் நகரில் இரவு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story