மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையில் நடைபெற்றது
இதில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவுகளும் செய்யப்பட்டது. முகாமில் காது, மூக்கு, தொண்டை நிபுணர், கண் மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர் என பலர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரை செய்தனர். 25 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 182 மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் கலந்து கொண்ட பல மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் வேண்டியும், சக்கர நாற்காலி வேண்டியும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இம்முகாமில் முடநீக்கியல் வல்லுனர் ராமன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முகாமின் தொடக்கத்தில், எலும்பு முறிவு டாக்டர் வராததால், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வேறு தேதிகளில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் வரக்கோரி அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை கண்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர், மருத்துவர் வராமல் எதற்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்துகிறீர்கள் என்று கேட்டு, அதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைத்து திருமானூர் பஸ் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் எலும்பு முறிவு டாக்டரை உடனடியாக வரவழைத்ததையடுத்து மாற்றுத்திறனாளிகள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story