ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் லதா கண்ணன், ஆணையர் அருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் லதா கண்ணன் எழுந்து பேசுகையில், கூட்டம் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. எந்த ஒரு நிதியும் கவுன்சிலர்களுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை. கடந்த 6-ந் தேதி சிறப்பு நிதியாக ரூ.90 லட்சம் வந்துள்ளது. அதனை ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு மட்டுமே பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கூறியபோது, அதனையும் நிறைவேற்றித்தரவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டி நிதி ஒதுக்கப்படுகிறது. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம், என்று கூறினார். இதையடுத்து துணைத்தலைவர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது. கூட்டத்தில் முன்னதாக ஆணையர் சந்தானம் வரவேற்றார். முடிவில் மேலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story