உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
விக்கிரவாண்டி,
கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). இவர் கடந்த 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, கடலூர் சுப்புராயலுநகர் பூந்தோட்டம் சாலையை சேர்ந்த கனகராஜ் மகனும், பிரபல ரவுடியுமான வீரா என்கிற வீரங்கன்(35) என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணனை மட்டும் நேற்று முன்தினம் காலை மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கழுத்தை அறுத்து தப்ப முயன்றார். அப்போது என்கவுண்ட்டரில் கிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீடியோ பதிவு
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பண்ருட்டி மாஜிஸ்திரேட்டு மணிவர்மன் முன்னிலையில் கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பண்ருட்டி மாஜிஸ்திரேட்டு மணிவர்மன், பலியான கிருஷ்ணனின் மனைவி காந்திமதி(22), தாய் லட்சுமி (54) மற்றும் உறவினர்கள் 7 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதற்கிடையே இவ்வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் கடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், விழுப்புரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல் ஆகியோர் கிருஷ்ணனின் உடலை ஒப்படைப்பதற்காக அவரது உறவினர்களை தனி வாகனத்தில் அழைத்து வந்தனர்.
பரபரப்பு
அப்போது அவர்கள் கிருஷ்ணனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், கிருஷ்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கூறிவிட்டு, உடலை வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் கிருஷ்ணனின் உடல், பிணவறையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story