பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக நர்சுகள் நேற்று டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள், கடந்த மே மாதம் முதல், 6 மாத காலம் என்ற வரையறையுடன் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக அரசு மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
6 மாத காலம் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையிலும், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தமிழக அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்தநிலையில், தமிழக அரசு தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 2 மாதங்களாக, தற்காலிக அடிப்படையில் சேர்க்கப்பட்ட நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இந்தநிலையில் நேற்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 400-க்கும் மேற்பட்ட நர்சுகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
பணி நிரந்தரம் தொடர்பான எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் மூலம் அரசிடம் முன்வைத்தோம். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
பணி நிரந்தரம்
இந்த பணிக்கு வருவதற்கு முன், ஏற்கனவே பார்த்த வேலையை விட்டுவிட்டு வந்த எங்களுக்கு, தற்போது இந்த வேலையிலும் பணி பாதுகாப்பு இல்லை என்பது எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது. எனவே தமிழக அரசு எங்களது நிலையை கருத்தில் கொண்டு பணியை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். நர்சுகள் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story