14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.
தாம்பரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி நடந்தது.
இந்தநிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், 8 அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 66 தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கவனத்துக்கு
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் உதவி தொகைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். சென்ற மாதம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடைய நிலுவைத் தொகை ரூ.912 கோடி வழங்கப்பட்டது. மீண்டும் ரூ.560 கோடி மிக விரைவில் வழங்கப்படும்.
கொரோனா காலகட்டத்தில் பணிக்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மற்ற மாநிலங்களில் 50 சதவீதமும், சில மாநிலங்களில் 20 சதவீதமும் குறைத்து கொடுத்தார்கள். ஆனால் முதல்-அமைச்சர் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முழு சம்பளத்தையும் கொடுத்தார்.
எனவே முதல்-அமைச்சரிடம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி அது சம்பந்தமாக அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி இன்னொரு கூட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொ.மு.ச.செயலாளர் நடராஜன் கூறியதாவது:-
23-ந்தேதி வேலை நிறுத்த அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை பட்டியல் தந்திருக்கிறோம், அதற்கான செலவினங்கள் எவ்வளவு, என்ன தொகை, எப்படி செய்யப்போகிறோம் என்ற விவரத்தை கேட்டும் இன்னும் 2 நாட்களில் நிதித்துறையிடம் கலந்து ஆலோசித்து விட்டு முடிவு செய்கிறோம் என அமைச்சர் சொல்கிறார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு குறுகிய இடைவெளியில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கலந்து பேசுவதாக சொல்லி இருக்கிறார்.
வருகிற 23-ந்் தேதிக்குள் கலந்து பேசி தெளிவான முடிவை அமைச்சர் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால், கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் 23-ந் தேதி வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிடுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story