வாடகை கார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாடகை கார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
திருப்பூர்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வாடகையை உயர்த்த கோரியும் திருப்பூர் வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட கால் டாக்சிகள் இயங்கவில்லை. பாரப்பாளையம், முத்தணம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது டாக்சிகளை நிறுத்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருப்பூர் மாவட்ட அனைத்து ஓட்டுனர் மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்கள் ஒருங்கிணைந்து முத்தண்ணம் பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வேலை நிறுத்த கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கதிரேசன், இணைச்செயலாளர் சந்திர மோகன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும். சொந்த பயன்பாட்டு வாகனத்தை வணிகத்திற்கு பயன்படுத்துவோர் மீதும் வாகனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்து, பதிவு எண் தடை செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காங்கேயம் ரோடு, விஜயாபுரம் ஒத்தக்கடை அருகே சாலையோரத்தில் கால் டாக்சிகள் அணிவகுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறிது தூரம் பேரணியாக சென்றனர். இதில் திருப்பூர் மாவட்ட ஓட்டுனர் தொழிற்சங்கம், தமிழ்நாடு உழைப்பாளர் ஓட்டுனர் நலச்சங்கம், மற்றும் திருப்பூர் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம் கால் டாக்சி நண்பர்கள் உள்ளிட்ட சங்கங்களை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கால் டாக்சி உரிமையளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story