எதிர்க்கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை தூண்டி விடுகின்றன; பா.ஜ.க. தேசிய செயலாளர் சுதாகர்ரெட்டி பேட்டி


எதிர்க்கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை தூண்டி விடுகின்றன; பா.ஜ.க. தேசிய செயலாளர் சுதாகர்ரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2021 2:33 AM IST (Updated: 20 Feb 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் சிறப்பான ஆட்சியை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை தூண்டி விடுகின்றன என்று தேசிய பா.ஜ.க. செயலாளர் சுகாதர்ரெட்டி கூறினார்.

ஜெயங்கொண்டம்:

தேர்தல் அலுவலகம் திறப்பு
ஜெயங்கொண்டத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மருதை சுப்பிரமணியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தேசிய செயலாளரும், தமிழ்நாடு தேர்தல் இணை பொறுப்பாளருமான சுதாகர்ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசுகையில், பா.ஜ.க. தொண்டர்கள் வீடு, வீடாக சென்று தாமரையை மலர வைக்க பாடுபட வேண்டும், என்றார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வரதராஜன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமர் நன்றி கூறினார். முன்னதாக சுதாகர்ரெட்டிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சுதாகர்ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது;-
வெற்றி வாகை சூடும்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய பட்ஜெட் வரலாற்றில் தமிழகம் கூடுதல் நிதியை பெற்றது இந்த பட்ஜெட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நாட்டில் நல்லாட்சியை வழங்கிவரும் பா.ஜ.க., அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடும்.
மோடியின் சிறப்பான ஆட்சியை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி. புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் நலன் காக்கும் சட்டங்கள் ஆகும். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அ.தி.மு.க. சிறப்பான கூட்டணி கட்சியாக விளங்குகிறது. தி.மு.க.வுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களித்தால் தனிப்பட்ட குடும்பம்தான் நலம் பெறும். பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நாடு நலம் பெறும். விவசாயம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story