வாலிபரை தாக்கிய முதியவர் கைது
வாலிபரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிளியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்(வயது 20). இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குழுமூர் காலனி தெருவை சேர்ந்த சாமிதுரை(60) என்பவர், ராஜபாண்டியனின் வயலில் மாட்டுத்தீவனத்திற்காக புல் அறுத்ததாக தெரிகிறது. இதனை ராஜபாண்டியன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை, வயலில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ராஜபாண்டியனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சாமிதுரையை, கிராம மக்கள் பிடித்து வைத்து, செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், சாமிதுரையை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறால், குழுமூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story