திருமணம் செய்வதாக ஏமாற்றி சென்னை பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி; ஆந்திராவை சேர்ந்த போலி தொழிலதிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி சென்னை பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த போலி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
பெண் புகார்
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், அடையார் துணை கமிஷனர் விக்ரமனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். நான் மறுமணம் செய்து கொள்வதற்காக பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அதில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் (45) என்பவர் தன்னை தொழில் அதிபர் என்றும், தானும் விவாகரத்து ஆனவர் என்றும் அறிமுகம் ஆனார்.
நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் பழகினோம். நான் அவருக்கு செல்போன் உள்பட விலையுயர்ந்த பல பொருட்களை பரிசாக அளித்தேன். இந்தநிலையில் தனக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டார். நானும் அவர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே என்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஐதராபாத்தில் கைது
இந்த புகார் மனு மீது சைதாப்பேட்டை ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனோகரனின் செல்போன் எண்ணை போலீசார் ஆராய்ந்ததில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சைதாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் காணிக்கைராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று மனோகரனை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்தூர் வசித்து வந்ததும், இதேபோன்று தன்னை தொழில் அதிபர் என்றுக்கூறி பல பெண்களை திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story