நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நடந்த நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வக்கீல்கள் அணி கோப்பை வென்றது


நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நடந்த நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வக்கீல்கள் அணி கோப்பை வென்றது
x
தினத்தந்தி 21 Feb 2021 5:24 PM IST (Updated: 21 Feb 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

நீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே நடந்த ‘நல்லுறவு கிரிக்கெட்' போட்டியில் வக்கீல்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே நல்லுறவு கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 4-வது ஆண்டாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையில் நீதிபதிகள் அணியும், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் தலைமையில் வக்கீல்கள் அணியும் களம் இறங்கின. முதலில் வக்கீல்கள் அணி ‘பேட்டிங்' செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வக்கீல்கள் வி.டி.பாலாஜி, ஸ்ரீரங்கன் ஆகியோர் களம் இறங்கி, 25 ரன்கள் எடுத்தனர். அவர்களை தொடர்ந்து, வக்கீல் ரவி, மூத்த வக்கீல்கள் ரமேஷ், பி.ரகுராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன ஆகியோர் அடுத்தடுத்து களம் இறங்கி ரன்களை குவித்தனர். இறுதியாக வக்கீல்கள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நீதிபதிகள் அணி களம் இறங்கியது. முதலில் நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர் பேட்டிங் செய்தனர். இதில் என்.ஆனந்த்வெங்கடேஷ் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வெளியேறினார். இவர்களை தொடர்ந்து நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், என்.சதீஷ்குமார், ஜி.கே.இளந்திரையன், எம்.எம்.சுந்தரேஸ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் களம் இறங்கி 6 விக்கெட் இழப்புக்கு, 105 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். வெற்றிபெற்ற வக்கீல்கள் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்தக் கோப்பையை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி.கோபிநாத் வழங்கினார். அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் பெற்றுக்கொண்டார்.

அவுட் ஆகாமால் 32 ரன்கள் எடுத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ‘ஆட்டநாயகனாக' தேர்வு செய்யப்பட்டார்.

நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா

சிறந்த பீல்டர்களாக நீதிபதி சி.சந்திரசேகர், மூத்த வக்கீல் ஓம்பிரகாசும், சிறந்த பந்துவீச்சாளராக நீதிபதி என்.சதீஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கிரிக்கெட் போட்டியில் நீதிபதிகள் அணியில் மூத்த பெண் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.என்.மஞ்சுளா ஆகியோரும் ஆண்களுக்கு இணையாக பீல்டிங் செய்து பாராட்டுகளை பெற்றனர்.

இந்த போட்டி குறித்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ‘வழக்கமான நீதிமன்ற பணிகளுக்கு நடுவே இதுபோல் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி புத்துணர்ச்சியைத் தருகிறது. நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நல்லுணர்வை ஏற்படுத்துகிறது’ என்று கூறினார். இந்த போட்டியை காண்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நேற்று வந்திருந்தார்.

Next Story