கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி


கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Feb 2021 12:56 PM GMT (Updated: 21 Feb 2021 12:56 PM GMT)

கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை 17½ கிலோமீட்டர் கொண்ட 2 வழி சாலையை கடந்த 2019-ம் ஆண்டு ரூ.76 கோடி மதிப்பில் 4 வழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை பல்வேறு இடங்களில் சாலை பணிகள் சரியான முறையில் 4 வழி சாலையாக மாற்றாமல் அரைகுறையாக நடந்து வருகிறது. குறிப்பாக சாலையை அகலப்படுத்தி உள்ள நிலையிலும் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. ஒரு சில இடங்களில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கால்வாய் பணிகள் முடிவு பெறாமல் அப்படியே கிடக்கிறது.

மேலும் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிகள் சரியாக நடைபெறவில்லை, குறிப்பாக ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே 2 வழி சாலையாக இருந்த சாலையை, 4 வழி சாலையாக மாற்றாமல், பழைய 2 வழி சாலையின் மீது புதிய சாலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

பொதுமக்கள் பாதிப்பு

இந்த பணிகள் பொதுமக்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் நடைபெறுவதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 4 வழி சாலையாக மாற்றப்பட்ட இடங்களில் சாலையின் நடுவில் சிமெண்டு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் அப்படியே பாதியில் நிற்கிறது. மேலும் 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த பணி அரைகுறையாக நடைபெற்று வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் சாலையை ஆய்வு செய்து சாலை பணி முறையாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story