உபா சட்டத்தை திரும்ப பெற கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உபா சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் தலைமை தபால் அலுவலகம் முன்பு பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்களுக்காக போராடக்கூடியவர்களையும், இடதுசாரிகள், இஸ்லாமியர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள உபா சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மாநிலஅரசின் போலீஸ்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு நிறுவனத்தை கலைக்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்கள்
மத்திய பா.ஜ.க. அரசை விமர்சனம் செய்ததற்காக உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திசா ரவியை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவக்குமார், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் ரிபாயிரசாதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னூலாப்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், தமிழ் தேசிய பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி நிறைவு செய்து பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story