கட்சி கொடி-பனியன்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
தேர்தலை முன்னிட்டு கட்சி கொடி-பனியன்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அரியலூர்:
கட்சி கொடிகள் தயாரிப்பு
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ேததி அறிவிக்கப்படும் முன்பே அனைத்து கட்சியினரும் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைவர்கள் வருகையையொட்டி அவர்களை வரவேற்கும் வகையில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பிரசாரம் மேலும் சூடு பிடிக்கும். அப்போது கட்சி கொடிகளின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
பனியன்கள்
இந்நிலையில் அரியலூர் பகுதியிலும் கட்சி கொடிகள், தொண்டர்களுக்கு வழங்குவதற்கான கட்சி சின்னம், கொடிகளின் நிறம், தலைவர்கள் படம் ஆகியவை பொறிக்கப்பட்ட பனியன்கள் போன்றவை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. அரியலூர் நகரில் அழகப்பா நகர் பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுபற்றி கொடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்பட அனைத்து கட்சிகளின் கொடிகள், பனியன்கள் தயாரிக்கப்படுகின்றன. பனியனின் பின்புறத்தில் கட்சியின் கொடி, சின்னம், தலைவர்களின் படங்களை ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் அச்சிட்டு வருகிறோம். கட்சிகளின் கூட்டணி முடிவு செய்யப்பட்டு, எந்த கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ, அங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட உடன், அந்தந்த கட்சிகளுக்கான வேட்பாளர்களின் படம், பெயருடன் பனியனின் முன்பகுதியில் ஸ்கிரீன் பிரிண்ட் செய்து கொடுப்பதற்காக ஏராளமான பனியன்கள், கொடிகளை தைத்து வருகிறோம், என்று கூறினார்.
Related Tags :
Next Story