சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கிய வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:55 PM GMT (Updated: 22 Feb 2021 7:55 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடந்த முதல் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். மாடுகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.

கீழப்பழுவூர்:

ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் ஊராட்சியை சேர்ந்த கீழையூர் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வீரபிள்ளை ஏரி திடலில் நடந்த இந்த ஜல்லிக்கட்டை, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க தயாராகினர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. சில காளைகள் வீரர்களை முட்டித்தூக்கி வீசி பந்தாடின.
24 பேர் காயம்
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் கட்டில், சைக்கிள், அண்டா, சோபா, மின்விசிறி, குக்கர், தங்க காசு, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. சில காளைகளின் உரிமையாளர்கள், தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளி, ஆடு, கோழி மற்றும் ரொக்கம் ஆகியவற்றை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அந்த காளைகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி, மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் காளைகள் முட்டியதில் மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமநாதன் (வயது 25), மேலப்பழுவூரை சேர்ந்த முனிராம்சிங் மகன் ஹேம்ராஜ் (32), பிச்சைமணி (65), மலத்தாங்குளம் கிராமத்தை அந்தோணிசாமி மகன் ஜெனீத் (25), கீழப்பழுவூரை சேர்ந்த வினீத் (23) ஆகிய 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
470 காளைகள்
காலை 9 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணி அளவில் முடிவடைந்தது. 11 மாடுகளை பிடித்த மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெனித் என்ற இளைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மொத்தம் 470 காளைகள் மற்றும் 225 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டையொட்டி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story