காரில் கடத்தப்பட்ட சினிமா போட்டோகிராபர், நண்பருடன் மீட்பு 6 பேர் கைது
இரிடியம் கலந்த கோவில் கோபுர கலசம் விற்பதாக கூறி ரூ.57 லட்சம் வரை மோசடி செய்ததால் காரில் கடத்தப்பட்ட சினிமா போட்டோகிராபர் மற்றும் அவரது நண்பரை ஸ்ரீபெரும்புதூரில் மீட்ட போலீசார், இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன் (வயது44). இவர், சென்னை அண்ணா சாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அதனை மூடிவிட்டார்.
அதன்பிறகு சினிமாவில் போட்டோகிராபராகவும், கிராபிக்ஸ் பணி செய்தும் வந்தார். அத்துடன் திருமுல்லைவாயல் அருகே புராதன பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த 19-ந்தேதி காலை வீட்டில் இருந்து திருமுல்லைவாயல் புறப்பட்டு சென்ற நியூட்டன், அதன்பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கவுசல்யா, தனது கணவர் மாயமானது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ரூ.30 லட்சம் கேட்டு கடத்தல்
இதற்கிடையில் திருச்சியில் வசிக்கும் கவுசல்யாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்ட நியூட்டன், தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்தால் தன்னை விடுப்பார்கள் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து அசோக்நகர் உதவி கமிஷனர் பிராங்டிரூபன் தலைமையில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, தலைமை காவலர்கள் ராஜ்மோகன், அசோக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நியூட்டனின் செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் பின்தொடர்ந்தனர். இதற்கிடையில் நியூட்டன் மீண்டும் தனது மாமனாரை தொடர்பு கொண்டு ரூ.30 லட்சத்தை குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொடுக்கும்படி கூறினார்.
போலீசார் மடக்கினர்
போலீசார், கடத்தல்காரர்களை பிடிக்க கவுசல்யாவின் தந்தையுடன் காலி பை ஒன்றில் துணிகள் மற்றும் சிறிதளவு பேப்பர்களை நிரப்பி பணம் கொடுக்க போவது போல் இரு சக்கர வாகனத்தில் மாறுவேடத்தில் சென்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் உஷாராக அவர்களை பல இடங்களுக்கு அலைக்கழித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதி இளைஞர்களின் உதவியோடு வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் மாறி, மாறி சென்று கடத்தல்காரர்களை பின்தொடர்ந்து சென்றனர்.
பட்டாபிராம் பகுதியில் கவுசல்யாவின் தந்தையிடம் பணம் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கவுதம்(25) மற்றும் சுனில் ஆகியோரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் கவுதம் மட்டும் சிக்கினார். போலீஸ் பிடியில் சிக்காமல் சுனில் தப்பிச்சென்று விட்டார்.
பின்னர் அவர், நியூட்டனின் மாமனாரை தொடர்பு கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிந்து விட்டதால் நியூட்டனை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் உஷாரான போலீசார் திருத்தணியில் உள்ள சுனிலின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மூலம் சுனிலிடம் பேச செய்தனர். போலீசார் தனது வீடு வரை வந்துவிட்டதை அறிந்து பயந்துபோன சுனில், தாங்கள் திருப்பதி அருகே இருப்பதாகவும் சென்னைக்கு வருவதாகவும் கூறினார்.
சினிமா துறையை சேர்ந்தவர்கள்
அதே நேரம் கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னல் மூலமாக அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருப்பதை அறிந்து கொண்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களின் வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அதில் கடத்தப்பட்ட நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ராகுஜி ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த கடத்தல் தொடர்பாக கவுதம், விக்கி (22), சதீஷ் (39), சுனில் (31) ஆகியோரை கைது செய்த போலீசார், பூந்தமல்லி பகுதியில் பணத்தை எதிர்பார்த்து நின்றிருந்த திலீப் (31) மற்றும் சீனிவாசன்(33) ஆகியோரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதான அனைவரும் சினிமா துறையில் சிறு, சிறு பணிகளை செய்து வருபவர்கள் என்பது தெரிந்தது.
சமீபத்தில் சினிமா துறையில் புகைப்படம் மற்றும் கிராபிக்ஸ் பணி செய்யும் போது கைதானவர்களுக்கும், கடத்தப்பட்ட நியூட்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது நியூட்டன், பெங்களூரை சேர்ந்த மேத்யூ என்பவருடன் சேர்ந்து இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்பதாகவும், அதனை வாங்கி வெளியில் விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைவார்த்தைகள் கூறி உள்ளார்.
போலி இரிடியம் கலசம்
அதை நம்பிய இவர்கள் 6 பேர் மற்றும் இவர்களுக்கு தெரிந்தவர்கள் என சுமார் 21 பேரிடம் ரூ.57 லட்சம் வரை பெற்று நியூட்டனிடம் கொடுத்து உள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட நியூட்டன், இரிடியம் கலந்த கலசத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததுடன், பின்னர் இரிடியம் கலசம் என கூறி போலியான பித்தளை சொம்பு ஒன்றை கொடுத்து ஏமாற்றியதும் தெரிந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த இவர்கள் 6 பேரும், தங்களது பணத்தை திரும்ப கேட்டனர். அதை தராமல் இழுத்தடித்ததால் நியூட்டனையும், அவரது நண்பர் ராகுஜியையும் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
மேலும் தங்களிடம் இருந்து மோசடி செய்த பணத்துக்கு பதிலாக நியூட்டனின் ஏ.டி.எம். கார்டு மூலம் 2½ பவுன் நகையை வாங்கி உள்ளனர். இதையடுத்து கைதான 6 பேரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், 2½ பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தப்பட்ட நாள் முதல் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் இருவரையும் வேறு எங்கேயும் அடைத்து வைக்காமல் காரிலேயே சுற்றி வந்துள்ளனர். கைதான 6 பேர் மோசடி புகார் அளித்தால் அதன்பேரில் நியூட்டன் மற்றும் தலைமறைவாக உள்ள பெங்களூரைச் சேர்ந்த மேத்யூ ஆகியோரிடமும் விசாரணை நடத்தவும் முடிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story