40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் என்னை அவமானப்படுத்துவதா? நடிகர் தர்ஷன் ரசிகர்கள் மீது ஜக்‌கேஷ் பாய்ச்சல்


40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் என்னை அவமானப்படுத்துவதா? நடிகர் தர்ஷன் ரசிகர்கள் மீது ஜக்‌கேஷ் பாய்ச்சல்
x
தினத்தந்தி 23 Feb 2021 8:24 PM GMT (Updated: 23 Feb 2021 8:24 PM GMT)

40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் தன்னை அவமானப்படுத்துவதா? என்று நடிகர் தர்ஷன் ரசிகர்களுக்கு ஜக்கேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோரிய ஜக்‌கேஷ்
கன்னட திரையுலகில் மூத்த நடிகராக இருந்து வருபவர் ஜக்‌கேஷ். இதுபோல கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜக்கேஷ் தனது செல்போனில் உறவினர் ஒருவரிடம் பேசி உள்ளார். அப்போது அவர் தர்ஷன் என்பவரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் தர்ஷனை பற்றி தான் ஜக்கேஷ் அவதூறாக பேசியதாக கூறி தர்ஷனின் ரசிகர்கள், மைசூருவில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஜக்கேசை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தர்ஷனை பற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தர்ஷனை பற்றி தான் தவறாக பேசவில்லை என்று ஜக்‌கேஷ் கூறினார். ஆனால் அதை ஏற்க தர்ஷனின் ரசிசர்கள் மறுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி தர்ஷன் ரசிகர்களிடம், ஜக்கேஷ் மன்னிப்பு கோரி இருந்தார்.

167 ரசிகர் மன்றம்

இந்த நிலையில் நேற்று ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

கடந்த 40 ஆண்டுகளாக கன்னட திரையுலகில் பணியாற்றி வருகிறேன். 150 படங்களில் நடித்து உள்ளேன். 29 படங்களை தயாரித்து உள்ளேன். மேல்-சபை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளேன். எனக்கு எதிராக நடிகர் தர்ஷன் ரசிகர்கள் செயல்படுகிறார்கள். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நான் என்ன தவறு செய்தேன்? யாரிடமாவது பணம் பெற்று ஏமாற்றினேனா? கொலை மிரட்டல் விடுத்தேனா? யாரையாவது மிரட்டினேனா? எதுவும் செய்யவில்லை. பின்னர் நான் எதற்காக பயப்பட வேண்டும்.

ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் இணைந்து நான் நடித்து உள்ளேன். நான் யாருக்கும் ஆதரவாக பேச மாட்டேன். அப்படி இருந்த என்னை தர்ஷன் ரசிகர்கள் அவமானப்படுத்தி விட்டனர். ஒரு மூத்த நடிகர் என்ற மரியாதை கூட எனக்கு தரவில்லை. நான் 20 பேரை எம்.எல்.ஏ., 20 பேரை மந்திரி ஆக்கி உள்ளேன். நிறைய பேருக்கு முக்கிய பதவிகள் பெற்று கொடுத்து உள்ளேன். இதுபற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. கன்னட திரையுலகம் தற்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பீதியில் உள்ளனர். படங்கள் சரியாக ஓடாமல் நஷ்டம் ஏற்படுவதால் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனக்கு 167 ரசிகர் மன்றம் உள்ளது.

ஒரு தந்தைக்கு பிறந்தவன்
நான் திரையுலகிற்கு புதியவன் அல்ல. திரைத்துறையில் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். என்னை வளர்த்து விட்ட கன்னட மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். அம்பரீஷ், விஷ்ணுவர்தன், ராஜ்குமார் இறந்த பின்னர் கன்னட திரையுலகம் மோசமான நிலைக்கு சென்று விட்டது. மீண்டும் சொல்கிறேன் நான் யாருக்கும் பயந்து ஓட மாட்டேன். நான் ஒரு தந்தைக்கு பிறந்தவன்.

இவ்வாறு அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

இதற்கிடையே மூத்த நடிகரான ஜக்கேசை அவமானப்படுத்திய நடிகர் தர்ஷன் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ஜக்கேசின் ரசிகர்கள் புகார் அளித்து உள்ளனர்.

Next Story