வாலாஜாபாத் ஒன்றியத்தில் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


வாலாஜாபாத் ஒன்றியத்தில் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2021 8:02 AM IST (Updated: 25 Feb 2021 8:02 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் ஒன்றியத்தில் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

வாலாஜாபாத், 

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-2021-ன் கீழ் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை குளங்களில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து வளர்க்கும் திட்டத்திற்காக ரூ.1 கோடியே 1 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ1½ லட்சம் மதிப்பில் 15 ஹெக்டேர் பரப்பளவில் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 பெரிய குளங்களில் இருப்பு வைத்து வளர்க்கப்படவுள்ளது. 

திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, 8 முதல் 10 செ.மீ.அளவில் நன்கு வளர்ந்த இந்திய பெருங்கெண்டை மீன்குஞ்சுகள் ஹெக்டேர் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மாவட்டத்தில் 15 ஹெக்டேருக்கு இருப்பு செய்யப்படவுள்ளது. 

அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட மீன்வளத் துறை சார்பில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், புதுப்பாக்கம் கிராம ஊராட்சிக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தில் 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்கும் பணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கிராம மக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். 

கிராம மக்களுக்கு புரத உணவு கிடைக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, மீன்வள உற்பத்தியை பெருக்கிடும் வகையிலும், மீன்வளத்துறை வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஜான் பெக்கர், பற்குணன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story