வாலாஜாபாத் அருகே வாலிபரிடம் நகை, பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது
வாலாஜாபாத் அருகே வாலிபரிடம் நகை, பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீண் (வயது 20). கடந்த வாரம் முத்தியால்பேட்டை சாலையில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பிரவீண் அருகில் நின்று வழி கேட்பது போல நடித்து திடீரென கத்தியால் அவரது தலையில் வெட்டி 1½ பவுன் நகை, செல்போன், ரூ.8 ஆயிரம் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.
காயம் அடைந்த பீரவீண் இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழிப்பறி குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே உள்ளாவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர்கள் சிலர் சுற்றி திரிவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உள்ளாவூர் பகுதிக்கு விரைந்து சென்ற வாலாஜாபாத் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி கொண்டிருந்த 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரும் வந்தவாசி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (19), ரிஷிநத் (19), சந்தோஷ்குமார் (20), கணேஷ் (21), சரவணன் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் அனைவரும் தனியாக நிற்பவர்களை தாக்கி அவர்களிடமிருந்த பணம், நகை, செல்போன், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்செல்வது வழக்கம் என தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 1½ பவுன் நகை போன்றவற்றை கைப்பற்றினர். அவர்களை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story