வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம்
திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
மாசிமக திருவிழா
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இக்கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற கோவிலாகும். பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பாடல் இக்கோவிலுக்காக பாடப்பட்டது ஆகும். மேலும் இக்கோவிலின் முன்பு மேற்கில் இருந்து கிழக்காக வந்த கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்னே வந்தவுடன் தெற்கில் இருந்து வடக்காக ஓடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று மாசிமக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இத்திருவிழாவையொட்டி கடந்த ஒரு வார காலமாக ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம் ஆகியவற்றில் சாமிகள் ஊர்வலமாக வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று சுந்தராம்பிகை, பாலாம்பிகையுடன் வைத்தியநாத சுவாமி தேரில் வலம் வந்தார்.
தேரோட்டம்
தேரோட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து இப்பகுதியை சுற்றியுள்ள கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், பாளையபாடி, அரண்மனைகுறிச்சி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி, சேனாபதி, முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் முன்பிருந்து தொடங்கிய தேரோட்டம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி திருமானூர் இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. இன்று(வெள்ளிக்கிழமை) நடராஜர் புறப்பாடு, இடப வாகன காட்சி மற்றும் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story