தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்


தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில்   முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 25 Feb 2021 9:11 PM GMT (Updated: 25 Feb 2021 9:12 PM GMT)

தமிழகம் மின்மிகு மாநிலமாக திகழ்கிறது என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினாார்.

கோவை,

கோவை கொடிசியாவில் நடந்த புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கீழ்பவானி கால்வாய் புதுப்பிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எனது அழைப்பின் கீழ் கடந்த 14-ந் தேதி சென்னை வந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். 

வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம், காவிரி-குண்டாறு இனைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நீர் ஆதராத்தை பெருக்குவதிலும், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.

 கீழ்பவானி கால்வாயை புதுப்பித்தல் மூலம் ஈரோடு, கரூர் பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.தமிழகம் தொழில் முதலீடு அதிகம் உள்ள மாநிலம் ஆகும். தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் தொழில் வளங்களை மேம்படுத்த தமிழக அரசு புதிய தொழில் கொள்கைகளை வகுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

தமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் மின் மிகு மாநிலமாக உள்ளது. நாட்டின் மிகவும் நகர மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். 

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 48.45 விழுக்காடு மக்கள் நகர பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு முனைப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்று பேசும்போது  கூறியதாவது:- மக்களுக்காகவே வாழ்ந்து மக்களின் மனம் நிறைந்த மக்களின் மனம் கவர்ந்த மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் வணங்கி இந்த இனிய விழாவில் பங்கேற்று புதுமை திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வருகை தந்திருக்கும் ஓய்வறியா உழைப்பு திலகம், விடாமுயற்சியின் வித்தக செம்மல் பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன்.

விருந்தோம்பல் என்பது தமிழ் பெருங்குடி மக்கள் விரும்பி செய்யக்கூடிய அடிப்படை ஒன்றாகும். அதிலும் நமக்கு நன்மை செய்ய வருபவர்களை விரும்பி உபசரித்து போற்றி வரவேற்பதில் தமிழகத்துக்கு உரிய தனிச்சிறப்பாகும். 

வலிமைமிகு இந்தியாவை வளர்த்தெடுக்கும் புதுமை செயல் வடிவமே மோடி. தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை வரவேற்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

வலிமைமிகு இந்தியாவை வளர்த்தெடுக்கும் புதுமை செயல்வடிவம் மோடி. தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தனி அன்பு கொண்ட தனிப்பெரும் தலைவர் அவர்.

பிரதமர் மோடி செம்மொழியான தமிழ் மொழி மீது அதிகம் பற்று கொண்டவர். கடந்த முறை சென்னை வந்த போது கூட திருக்குறளை மேற்கொள் காட்டி பேசியது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான். என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

Next Story