பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மீன்சுருட்டி:
பிரம்மோற்சவ விழா
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள், திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், தினமும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது.
தேரோட்டம்
இந்நிலையில் முக்கிய நிகழ்வான மாசிமக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமூர்த்தி உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராஜகோபுர வாசலில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. கோவிலை சுற்றி வலம் வந்த தேர், ராஜவீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.
இதில் செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் பொதுமக்கள், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story