வேதாரண்யம் அருகே அவரிக்காட்டில் ரூ.59 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
வேதாரண்யம் அருகே அவரிக்காட்டில் ரூ.59 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் அருகே அவரிக்காட்டில் ரூ.59 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினர். அவரது வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
அவரிக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.59 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றுள்ளது. விரைவில் பணிகள் முடிவடைந்து குடிநீர் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் அவரிக்காடு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், கோவில்பத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகராசு, வேளாண் விற்பனை குழு உறுப்பினர் தங்கசவுரிராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இளவரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபம் ஏற்றி உறுதிமொழி
இதேபோல வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story