வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் முறையீடு
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ந் தேதி முதல் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:- சூலூர் வட்டம் செம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள நீரோடைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து விளை நிலங்களில் உள்ள பயிர் வகைகள் அனைத்தையும் தின்று நாசாமாக்கி விடுகின்றன.
இதைதடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுரைகளை வனத்துறைக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் வட்டாரம் தென்கரை கிராமம் சென்னனூரை சேர்ந்த விவசாயி ஒருவரது 1.86 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் 29 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுபோன்று விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story