அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்தது


அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்தது
x
தினத்தந்தி 27 Feb 2021 4:44 PM IST (Updated: 27 Feb 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

9-ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் இருந்தாலும், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில் தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்ய வேண்டும். அனைத்துவகை பள்ளிகள் மற்றும் வகுப்புகளை உடனே திறக்கவேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளிலேயே எளியமுறையில் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்புப்படி 75 சதவீதம் கட்டணம் வசூலித்துக்கொள்ள அரசாணை வெளியிடவேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. 
வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தலைமை தாங்கினார். தலைவர் ஜெ.கனகராஜ், துணைத்தலைவர் ஜெ.பி.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் குறித்து கே.ஆர்.நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்போகிறார்கள்?. மதிப்பெண் இல்லாமல் வெறும் தேர்ச்சி மட்டும் வழங்கினால் அது எந்த அளவுக்கு உதவும். நாங்கள் எங்கள் நலனுக்காக போராடவில்லை. 

மாணவர்கள் நலனுக்காகத்தான் போராடுகிறோம். எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும். எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஷிப்ட் முறையில் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

Next Story