மெட்ரோ ரெயில் பயணியின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டு
நேரு பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று மெட்ரோ ரெயில் சென்றபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் டிரைவர் பி.எம்.ராஜீவ் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டாளர் ஜே.ராஜேஷ் ஆகிய இருவரும் அந்த பயணியை மீட்டு உடனடியாக முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சரியான நேரத்தில் உதவி செய்து அந்த பயணியின் உயிரை காப்பாற்றினர். இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ், மெட்ரோ ரெயில் டிரைவா் பி.எம்.ராஜீவ், கட்டுப்பாட்டாளர் ஜே.ராஜேஷ் ஆகியோரை கவுரவித்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மெட்ரோ ரெயில் இயக்குனர்கள் சுஜாதா, ராஜீவ் நாராயண் திவேதி, ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story