ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்


ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Feb 2021 8:01 PM IST (Updated: 27 Feb 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே முன் அறிவிப்பின்றி தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெற்றோர்கள் அதிர்ச்சி
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில் நிர்வாகம் பள்ளியை மூடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு காரணமாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறிவிப்பு வெளியான உடன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி திடீர் என பள்ளியை மூடினால் பிள்ளைகளின் படிப்பு கேள்விகுறியாகிவிடும் எனக்கூறி முறையிட்டனர். அதற்கு நிர்வாகம் திட்டவட்டமாக பள்ளி மூடப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை 
கலைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story