கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
பெரம்பலூர்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஸ்ரீமாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி மீண்டும் காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது. தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக பெரம்பலூரில் சாலையோரங்களில் திடீரென்று காய்கறி கடைகள் நிறைய வியாபாரிகளாலும், விவசாயிகளாலும் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் நகராட்சிக்கு அதிக அளவு வாடகை கொடுத்து மார்க்கெட்டில் காய்கறி கடைகளை நடத்தி வரும் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள காய்கறி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் பலமுறை நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் அவரோ இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு சாலையோர காய்கறி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே சென்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவையும், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனையும் சந்திக்க வியாபாரிகள் சென்றனர். ஆனால் அவர்களால் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story