குன்றத்தூர் அருகே பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


குன்றத்தூர் அருகே பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2021 11:23 AM IST (Updated: 28 Feb 2021 11:23 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே வீட்டில் பால் வியாபாரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி, 

குன்றத்தூர் அடுத்த நத்தம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சசிகுமார் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று சசிகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், பால் வியாபாரம் செய்துவரும் சசிகுமார் திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பால் ஊற்றுவது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கு ஒரு வீட்டில் பால் ஊற்ற சென்ற போது, ஏற்பட்ட தகராறில் சசிகுமாரை குடியிருப்புவாசிகள் திட்டியதாகவும் இனி இங்கே ஒரு வாரத்திற்கு பால் ஊற்ற கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story