நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது


நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2021 5:56 AM GMT (Updated: 28 Feb 2021 5:56 AM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில், சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். இவர் நகைகளை செய்து ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி மகேந்திர் தனது மகன் ஆசிஸ், மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர் ராஜ்குமார் ஆகியோரிடம் ஆர்டர் செய்த நகைகளை சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பதற்காக திருவள்ளூரில் இருந்து ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.

ஆட்டோவை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி சென்றார். ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேரை கைது செய்து 800 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 25), கலைச்செல்வன் (26) ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு கூட்டு சாலை அருகே பதுங்கி இருந்த போது நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 318 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story