பெங்களூருவில் தொழில்துறையில் முதலீடு செய்வதன் மூலம் 20 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா


பெங்களூருவில் தொழில்துறையில் முதலீடு செய்வதன் மூலம் 20 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 28 Feb 2021 3:10 PM IST (Updated: 28 Feb 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தொழில்துறையில் முதலீடு செய்வதன் மூலமாக 20 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

முத்திரை திறப்பு
பெங்களூரு வின்சென்ட் மேனர் சர்க்கிளில் மேக் இன் இந்தியா (உள்நாட்டில் தயாரிப்போம்) திட்டத்தின் முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி மூலமாக இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு மேக் இன் இந்தியா திட்டத்தின் சிங்க முத்திரையை திறந்து வைத்தார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

20 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி
பிரதமர் நரேந்திர மோடியின் கனவான மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, அதற்கான முத்திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. தொழில்துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதனால் தொழில்துறை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகத்தில் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரு ஒன்று என்று நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதற்கு ஏற்றார் போல பெங்களூருவில் தொழில்துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது. பெங்களூருவில் தொழில்துறையில் முதலீடு மூலமாக பொருளாதாரம் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூருவில் மிஷன்-2022 திட்டத்தின் கீழ் சாலைகள், மேம்பாலங்கள் அமைத்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஆர்.அசோக், பைரதி பசவராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உடன் இருந்தார்கள்.

Next Story