சட்டசபை தேர்தல் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 91 பேர் தர்மபுரி வந்தனர் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
சட்டசபை தேர்தல் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 91 பேர் தர்மபுரி வந்தனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 91 பேர் நேற்று தர்மபுரி வந்தனர். அவர்கள் செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை மாவட்ட போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முக்கியமாக மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படும் சோதனைச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், வாக்கு என்னும் மையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவ வீரர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story