தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 89 துணை ராணுவப்படை வீரர்கள் வேலூர் வருகை


தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 89 துணை ராணுவப்படை வீரர்கள் வேலூர் வருகை
x
தினத்தந்தி 28 Feb 2021 7:38 PM GMT (Updated: 28 Feb 2021 7:40 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த 26-ந் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் செய்து வருகின்றனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தலின்போது அரசியல் கட்சியினர் வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்குமேல் எடுத்து செல்வதை தடுக்கவும் 15 பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பணம், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை கொண்டு வருவதை தடுக்கவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவப்படை வீரர்கள் சென்னைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 

அதன்படி முதற்கட்டமாக 89 துணை ராணுவப்படை வீரர்கள் வேன் மூலம் நேற்று காலை வேலூருக்கு வந்தனர். அவர்கள் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகேயுள்ள காவலர் பயிற்சி பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப்படை வீரர்கள் தமிழக -ஆந்திர மாநில எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி சாலை, பேரணாம்பட்டு அரவட்லா ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சோதனையிலும், பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினருடன் சேர்ந்து வாகன தணிக்கையிலும் ஈடுபட உள்ளனர். 

தேர்தல் பாதுகாப்பு பணியில் அவர்கள் ஓரிருநாளில் ஈடுபட உள்ளனர். 89 பேரும் மாவட்டம் முழுவதும் விரைவில் பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story