நெல்லை அருகே பயங்கரம்; நிலத்தரகர் சரமாரி வெட்டிக் கொலை
நெல்லை அருகே நிலத்தரகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை, மார்ச்:
ெநல்லை அருகே நிலத்தரகர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நிலத்தரகர்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50). நிலத்தரகரான இவர் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவில் ராஜா தனது மோட்டார் சைக்கிளில் நடுவக்குறிச்சி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
வெட்டிக் கொலை
இதனால் ராஜா அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜா நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த பயங்கர கொலை தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story