வருகிற 15, 16 தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்- அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் தகவல்
தனியார் மயமாக்கலை கண்டித்து வருகிற 15,16 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.
திருச்சி,
தனியார் மயமாக்கலை கண்டித்து வருகிற 15,16 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.
மண்டல மாநாடு
கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மண்டலங்களுக்கு இடையேயான மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டினை கே.ஆர்.ஏ. முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பாலாஜி வரவேற்று பேசினார். மாநாட்டில் திருச்சி, தஞ்சாவூர், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மண்டலங்களில் இருந்து மண்டல உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்த போராட்டம்
இந்த மாநாட்டில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நமது கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனாலும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதை கண்டித்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வருகிற 15,16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும். அப்படி தடுத்து நிறுத்தினால் தான் எதிர்கால சந்ததியினரும், மக்களும் பயனடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story