சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 189 துணை ராணுவ வீரர்கள் வருகை


சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 189 துணை ராணுவ வீரர்கள் வருகை
x
தினத்தந்தி 28 Feb 2021 10:41 PM GMT (Updated: 28 Feb 2021 10:41 PM GMT)

சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 189 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 189 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.
துணை ராணுவ வீரர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து நேற்று அதிகாலை தனி ரெயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எப்.) 2 கம்பெனி வீரர்கள் 189 பேர் சேலத்திற்கு வந்தனர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு அதிகாலை 4.40 மணிக்கு வந்து இறங்கிய அவர்களை உள்ளூர் போலீசார் வரவேற்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பாண்டே தலைமையில் வந்துள்ள இந்த துணை ராணுவப்படையில், உதவி கமிஷனர் ராகுல் ராய், 4 இன்ஸ்பெக்டர்கள், 183 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களை 2 பிரிவாக பிரித்து, சேலம் மாவட்ட பகுதிக்கும், மாநகர பகுதிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடு்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணி ஒதுக்கீடு
அதன்படி, மாவட்டத்திற்கு 91 வீரர்களை பிரித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இலியாஸ் அழைத்து சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் ஓமலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சேலம் மாநகர பகுதிக்கு 92 வீரர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாநகர போலீசார் அழைத்து சென்று லைன்மேடு காவலர் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ள துணை ராணுவ படையினருக்கு சோதனை சாவடிகள், பறக்கும் படைகள் ஆகியவற்றில் பணி ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டத்தில் உள்ள நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட உள்ள தற்காலிக சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், சேலம் மாவட்டத்திற்கு இன்னும் கூடுதல் துணை ராணுவ படையினர் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story