வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள்.


வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள்.
x
தினத்தந்தி 1 March 2021 11:18 PM IST (Updated: 1 March 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

 ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்  நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர்கள்

இந்திய தேர்தல் ஆணையம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் 19-ந் தேதி. வேட்புமனுக்கள் பரிசீலனை 20-ந்‌ தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப்பெற 22-ந்‌ தேதி கடைசிநாள். வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ந்‌ தேதியும் நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  கடந்த தேர்தலில் 1,122 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது 325 துணை வாக்குச்சாவடி மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, மொத்தம் 1,447 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படைகள் அமைப்பு

தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு கருவி 1,904, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்வதற்கான கருவி 2,521 உள்ளது. இவை அனைத்தும் நமது தேவைக்குப் போக 20 சதவீதம் அதிகமாக உள்ளது.

வாக்குச்சாவடி பணியாளர்களை பொறுத்தவரையில் 6,945 பேர் தேவை. ஆனால் 7,032 பேர் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளனர். மைக்ரோ பார்வையாளர்கள் 206 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தொகுதிக்கு 3 பறக்கும்படை வீதம் 12 பறக்கும் படைகளும், 12 நிலை கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். அதற்காக 18004255669 என்ற கட்டணமில்லா தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது. இதில் அனைத்துவித தேர்தல் புகார்களும் தெரிவிக்கலாம்.

செயலி அறிமுகம்

தேர்தல் புகார்களை பதிவு செய்ய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் செய்யப்படும் புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் சுவர் விளம்பரம், பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தனியார் சுவர்களிலும் விளம்பரம் செய்ய முடியாது. ஊராட்சி பகுதிகளில் விளம்பரம் செய்ய தனி நபரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அளித்தால் விளம்பரம் செய்யலாம்.

வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற வாக்காளர் சேவை கட்டணமில்லா தொலைபேசி இயங்கும். அதில் வாக்காளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கட்சியினர், அச்சக உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள், மண்டப உரிமையாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். வாக்காளர்கள் சாதி, மதம், இனம் வேறுபாடு பார்க்காமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story