வனப்பகுதியில் விலங்குகளிடம் இருந்து மலைவாழ் விவசாயிகளை காக்கும் அரணாக பரண்கள் உள்ளது.


வனப்பகுதியில் விலங்குகளிடம் இருந்து மலைவாழ் விவசாயிகளை காக்கும் அரணாக பரண்கள் உள்ளது.
x
தினத்தந்தி 1 March 2021 11:22 PM IST (Updated: 1 March 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் விலங்குகளிடம் இருந்து மலைவாழ் விவசாயிகளை காக்கும் அரணாக பரண்கள் உள்ளது.

தளி:-
வனப்பகுதியில் விலங்குகளிடம் இருந்து மலைவாழ் விவசாயிகளை காக்கும் அரணாக பரண்கள் உள்ளது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை
வானுயர்ந்த மலைகள் அவற்றை தழுவிய மேகங்கள் பசுமை நிறைந்த சோலை என வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனதை கொள்ளை கொள்ளும் அழகு. யானையின் பிளிறல், புலியின் உறுமல், மயில்களின் அகவல், குயிலின் கீதம், பூக்கள் மற்றும் மூலிகைகள் நறுமணம் கலந்த காற்று என அற்புதங்களும், அதிசயங்களும், அரிய வகை உயிரினங்களும் நிறைந்தது வனப்பகுதி. இதனால் சுற்றுலா செல்கின்ற அனைவரின் முதல் தேர்வாக வனப்பகுதி திகழ்கிறது.
ஆனால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை வேதனையும், போராட்டமும், சவால்களும் நிறைந்ததாகும். சமவெளிப்பகுதி எந்த ஒரு தேவையையும் எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. சிறு தேவைக்கு கூட பல மைல் தூரம் அலைந்து திரிந்து தான் நிறைவேற்ற வேண்டும். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள மலைவாழ் மக்கள் அவ்வளவு எளிதாக உணவு உற்பத்தியில் ஈடுபட முடியாது. 
கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியை மாதக்கணக்கில் உழைத்து அதனை சீரமைத்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். அந்த நிலத்திற்கு கால்வாய் வெட்டியோ அல்லது குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு சென்றால் தான் விவசாயம் சாத்தியம். அதுவும் ஆறுகளில் நீர்வரத்து உள்ளவரை தான். இயற்கை ஒத்துழைத்தால் மலைப்பகுதியில் இயற்கையாக விளைகின்ற பொருட்களும், கால்நடை வளர்ப்பும் வாழ்வாதாரத்தை அளிக்கிறது. இல்லையென்றால் வறுமையில் வாட வேண்டியதுதான். 
உயிர் காக்கும் பரண்
இது குறித்து மலைவாழ் விவசாயிகள் கூறியதாவது:- எதிர்பாராதவிதமாக ஆண்டின் இரு பருவத்திலும், புயல் மழையும் கை கொடுத்து உதவினால் சாகுபடி பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. பயிர்களை இரவு பகலாக தீவிரமாக பராமரித்து அறுவடை நிலைக்குக்கொண்டு வரும் போது வனவிலங்குகள் தாக்குதலை தொடங்கி விடுகிறது. அதிலும் யானைகள் கூட்டம் பயிர்களை அதிகளவு சேதப்படுத்துகிறது. அதன் வயிற்றுக்குள் செல்லும் உணவை விடவும் காலால் மிதிபட்டு அழியும் உணவே அதிகம். பசியோடு உள்ள அவற்றை விரட்ட சென்றால் உயிர் நம்மிடம் இருக்காது.
 இதற்கிடையில் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் வேறு. வன விலங்குகளையும் விரட்ட வேண்டும் உயிரையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் அதற்கான பாதுகாப்பான வழியே பரண் என்னும் அரண். உயரமான அல்லது திடகாத்திரமான மரங்களில் மூங்கில் மற்றும் இலைகளை கொண்டு பரண் அமைக்கப்படுகிறது. அதுவே மலைவாழ் விவசாயிகளின் இரவு நேர மாளிகை ஆகும்.
வன விலங்குகள் நடமாட்டம்
 ஆனால் அங்கு மாலை 6 மணிக்குள் சென்றடைய வேண்டும். இல்லையெனில் இடையில் தென்படுகின்ற வனவிலங்குகளிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். பரணில் அமர்ந்து விடிய விடிய கண்விழித்து காத்திருந்து வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை பறையடித்து ஒலி எழுப்பியோ விரட்ட வேண்டும். இரவில் கண்கள் நன்றாக தெரிகிறதோ இல்லையோ காதுகள் நல்ல முறையில் கேட்க வேண்டும்.
அப்போதுதான் வனவிலங்குகளின் வருகையை அதன் காலடி ஓசையின் மூலம் உணர்ந்து சக விவசாயிகளுக்கு சமிக்கை செய்ய இயலும். இந்த தகவல் பரிமாற்றத்தால் அனைவரும் ஒன்றிணைந்து திடீரென ஒலி எழுப்பி வனவிலங்குகளை விரட்டுகின்றனர். இதனால் உயிரும் பாதுகாக்கப்படுவதுடன் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடிவதாக மலைவாழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story