தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி அச்சிட்டால் அச்சக உரிமம் ரத்து


தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி அச்சிட்டால் அச்சக உரிமம் ரத்து
x
தினத்தந்தி 2 March 2021 12:40 AM IST (Updated: 2 March 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள், நோட்டீஸ் அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,
தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள், நோட்டீஸ் அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரசுரம் செய்யும் போது கண்டிப்பாக அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி, பதிப்பாளர் அல்லது உரிமையாளர் பெயர் ஆகியவற்றினை சுவரொட்டி அல்லது துண்டு பிரசுரத்தின் முன்பக்கத்தில் படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும்.
உரிமம் ரத்து
எந்த ஒரு அச்சக உரிமையாளரும் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் அச்சிடுவதற்கு முன்பு அச்சடிக்க கொடுத்தவரிடம் உரிய படிவத்தில் அனுமதி (இணைப்பு - 1 இரண்டு நகல்கள்) பெற வேண்டும். உரிய அனுமதி பெற்ற பிறகே அச்சக உரிமையாளர்கள் அச்சு செய்ய வேண்டும். அச்சடித்த மூன்று தினங்களுக்குள் இணைப்பு - 2 படிவத்தில் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேற்படி அறிக்கையுடன் அச்சகத்தாரின் உறுதிமொழி அறிக்கை, அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் நான்கு எண்ணிக்கையில் இணைக்கப்பட வேண்டும்.
அத்துடன் அச்சிடப்பட்ட சுவரொட்டி, துண்டு பிரசுரத்தின் எண்ணிக்கை மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை சரியாக குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு வகையான சுவரொட்டி, துண்டு பிரசுரத்திற்கு தனித்தனியே அச்சக உரிமையாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே அச்சிடப்பட்ட ஒரு சுவரொட்டி, துண்டு பிரசுரத்தினை மறுபடி பிரிண்ட் செய்தாலும் அறிக்கை அளிக்க வேண்டும்.
அவ்வறு உரிய அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளர் மற்றும் பதிப்பகத்தார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். அதனைத்தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடவடிக்கை
இது தவிர அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமானது சட்டத்திற்கு புறம்பானதாகவோ அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு, மற்றும் சாதிக்கு எதிர்ப்பு இருந்தாலோ, அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிர்ப்பு உடையதாக இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி, துண்டு பிரசுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்படும். மேலும், அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ள படிவம் தேர்தல் பார்வையாளருக்கு தேர்தல் செலவினத்தில் சேர்த்துக் கொள்ளவதற்காக அனுப்பப்படும்.
இவ்வறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலால் உதவி ஆணையர் .சிந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெத்தினவேல் மற்றும் அச்சக உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story