பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்
மழைக்கால நிவாரண தொகை வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னரே அந்த கூட்டங்கள் நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் மனுக்கள் போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பெட்டியில் மனுக்களை போட்டனர்
நேற்று திங்கட்கிழமை என்பதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்கள் அளிக்க பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு வந்த குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் தொழில் செய்து வருவதை பதிவு செய்துள்ளோம். ஆனால் எங்களுக்கு ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படும் மழைக்கால நிவாரண தொகையும், தற்போது கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட நலவாரிய உதவி தொகையும், பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி, சேலையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்கள் தங்களது மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story