முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவை,
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கு கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அத்துடன் கடந்த மாதம் 13-ந் தேதி ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் போடும் பணி தொடங்கியது.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயது முதல் 59 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
கோவேக்சின் செலுத்த ஆர்வம்
இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த இணையதளம் சர்வர் கோளாறு காரணமாக இயங்காததால்,
அதில் பதிவு செய்ய முடியவில்லை. எனவே முதியவர்கள் தடுப்பூசி போடும் இடங்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது. அங்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்று செலுத்தப்படுகிறது.
மேலும் அங்கு வந்தவர்களிடம் கோவஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவர்களின் விருப்பத்தின் கீழ் செலுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கோவேக்சின் தடுப்பூசியை நேற்று போட்டுக்கொண்டார்.
அது பற்றி அறிந்த முதியவர்கள் பலர் நேற்று கோவேக்சின் தடுப்பூசியை கேட்டு ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை கண்காணிப்பு அறையில் அமர வைக்கப்பட்டு, ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து அனுப்பி வைத்தனர்.
பக்கவிளைவுகள் இல்லை
கோவை மாவட்டம் முழுவதும் 25 அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 79 தனியார் ஆஸ்பத்திரிகளில் சேவை கட்டணம் உள்பட ரூ.250 என்ற விலையில் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடச்செல்பவர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, வயதுக்கான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்கள் கூறும்போது, நாங்கள் தடுப்பூசி செலுத்தும் அறைக்கு பயந்தவாறு வந்தோம். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பயம் மறைந்து போனது. அத்துடன் 30 நிமிடங்கள் தனி அறையில் அமர்ந்து இருந்தோம். பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றனர்.
Related Tags :
Next Story