குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது


குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 7:00 AM IST (Updated: 2 March 2021 7:00 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 28). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 188-வது வட்ட தே.மு.தி.க. செயலாளர் சரத் என்ற சரத்குமார் (28) என்பவர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பிய மேனகா, முதலில் ரூ.30 ஆயிரம் கொடுத்தார். அதற்கு தங்க காசுகளை சரத்குமார் வாங்கி கொடுத்தார். அதன் பிறகு சரத்குமார், சென்னை விமான நிலையத்தில் தனக்கு பழக்கம் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்க நகைகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக மேனகாவிடம் கூறினார்.

அதை நம்பிய மேனகா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பணத்தை வாங்கி ரூ.16 லட்சம் வரை சரத்குமாரிடம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி சரத்குமார் நகையை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.

இந்த மோசடி தொடர்பாக 2019-ம் ஆண்டு மடிப்பாக்கம் போலீசில் மேனகா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக சரத்குமார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கூறி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனரிடம் மேனகா மீண்டும் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து போலீசார், குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த தே.மு.தி.க. வட்ட செயலாளர் சரத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story