கோடை சீசனுக்காக கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி


கோடை சீசனுக்காக கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி
x
தினத்தந்தி 2 March 2021 7:50 AM IST (Updated: 2 March 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனுக்காக கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலா மையங்களில் முக்கியமானதாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் ஆகியவை உள்ளன.

இந்தப் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. 

மலர் நாற்றுகள் 

இந்த நிலையில் கோடை சீசன் தொடங்குவதையொட்டி, நேரு பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடுவதற்காக, கடந்த 2 வாரங்களுக்கு முன் நிலத்தை பதப்படுத்தி, பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் இருந்து இயற்கை உரம் கொண்டுவரப்பட்டு போடப்பட்டது. 

மேலும் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 5 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டன. தற்போது கோத்தகிரி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் நடப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாப்பதற்காக தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதுடன், புல் தரைகளை வெட்டி சமப்படுத்தி பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். 

முழுமையாக தயாராகிவிடும் 

இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, இந்த ஆண்டு முதல் பூங்காவிற்கு தேவையான நாற்றுகளை தயாரிக்க பூங்காவிலேயே, நர்சரி அமைத்து மலர் நாற்றுகளை தயார் செய்து உள்ளோம். 

கோடை சீசனுக்காக மலர் நாற்றுகளை பூங்காவில் நடவு செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு வாரத்திற்குள் அனைத்து மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுவிடும். வரும் கோடை சீசனுக்குள் பூங்கா முழுமையாக தயாராகி காண்போர் மனதை கவரும் வகையில் மலர்கள் பூத்து குலுங்கும் என்றனர்.


Next Story