சேவூர் அருகே பஸ்-கார் மோதல்; வாலிபர் பலி
சேவூர் அருகே பஸ்கார் மோதல் வாலிபர் பலி
சேவூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சேவூர் -அவினாசி சாலை, கருமாபாளையம் அருகே வந்த போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலது பக்கமாக பஸ்சை திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக அந்த பஸ் எதிரே அவினாசியில் இருந்து சேவூர் நோக்கி வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதில் காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் மன்னார்காட்டை சேர்ந்த பசீர் மகன் முகமது ஷாஹீர் (வயது29) அவினாசி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த அதே பகுதியை சேர்ந்த ஜலீல் (28) என்பவருக்கு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story