பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீஸ் அதிகாரிகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது. அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார நிகழ்ச்சி, கூட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நியாயமான முறையில் அனுமதி வழங்க வேண்டும்.
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரம் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதனை போலீஸ் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் மட்டும் சுவர் விளம்பரம் வரைய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதுபோல் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்போது 5 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேலும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினர் நடத்தும் ஊர்வலங்கள் நேர், எதிராக நடத்துவது போன்ற நிலை இருக்கக்கூடாது.
அதுபோல் ஊர்வலமோ, கூட்டமோ நடத்துவதற்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அரசியல் கட்சிகளை அனுமதிக்கக்கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் அமைதியான முறையில் தேர்தல் நடத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக நமது மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 50 வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 33 வாக்குச்சாவடிகளும் என 83 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story