திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது ரூ.69 ஆயிரம், 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்


திருப்பூரில்  ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது  ரூ.69 ஆயிரம், 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2021 4:57 PM GMT (Updated: 2 March 2021 4:57 PM GMT)

திருப்பூர், மார்ச்.3- திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தவர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் மற்றும் 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்
திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தவர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் மற்றும் 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாங்க் ஆப் பரோடா

திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால்ரோடு பகுதியில்  சர்க்கார்பெரியபாளையம் கிளையாக பாங்க் ஆப் பரோடா வங்கி  செயல்பட்டு வருகிறது.  இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் வங்கி வளாகத்தில் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சிலர் கடந்த மாதம் 28-ந் தேதி காலையில் சென்றனர். அப்போது வங்கியின் காம்பவுண்டு சுவர் கேட் சேதம் அடைந்து இருந்ததோடு,  ஏ.டி.எம். மையத்தின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ஏ.டி.எம்.எந்திரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து  ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கிரிதரன் (வயது 33) ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். 

கண்காணிப்பு கேமரா

மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 3 கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது  அவற்றில் 2 கேமரா பழுதாகி இருப்பதும், ஒரு கேமரா மட்டும்  செயல்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணி அளவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் காரில் இருந்து இறங்குவதும்,  அவர்களில் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் ஸ்பிரே அடிப்பதும் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து மற்ற அனைவரும் உள்ளே செல்வதும், சிறிது நேரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை வாசல் வரை நகர்த்தி வருவதும்,  பின்னர்  அந்த .எந்திரத்தை கயிறு கட்டி, காருடன் இணைத்து இழுப்பதும், எந்திரம் துண்டிக்கப்பட்டதும், அதை  காரில் தூக்கிப்போட்டு தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. 
இதையடுத்து அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் வந்த கார் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அனாதையாக நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த காரை கைப்பற்றினார்கள். அப்போது அந்த காரில் ஏ.டி.எம். எந்திரம் இல்லை. போலீசாரின் பிடியில் சிக்கி விடுவோம் என பயந்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த காரை சுங்கச்சாவடி அருகே நிறுத்தி விட்டு வேறு ஒரு காரில் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. 

உடைக்கப்பட்ட நிலையில் எந்திரம் மீட்பு 

இதையடுத்து கொள்ளையர்கள் வந்த கார் யாருடையது என்று, போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், அந்த காரை கொள்ளையர்கள் திருடி வந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையில் ஊத்துக்களி இன்ஸ்பெக்டர்  பாலசுந்தரம், காங்கேயம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன்  மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட  7 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில்,  கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம், வெள்ளியம்பாளையம் பிரிவில் நேற்று முன்தினம் கிடந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த எந்திரத்தின் உடைந்த பாகங்களை கைப்பற்றினார்கள். இதற்கிடையில் கொள்ளையடிக்கப்பட்ட எந்திரத்தில் ரூ.1 லட்சத்து 100 மட்டுமே இருந்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6 பேர் கைது

இந்த நிலையில் ஏ.டி.எம்.எந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டம்  கருங்கல்பாளையம் திருநகர் காலணியில் உள்ள ஒரு தனியார் குடோனில் நிறுத்தப்பட்டு இருந்த  கன்டெய்னர் லாரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு அங்கு சென்று, கன்டெய்னர் லாரியில் பதுங்கி இருந்த  ராகுல் (வயது 24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38)  மற்றும் காசிம்கான் (45) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் என்று  விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து கொள்ளையர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரத்து 120, மற்றும் 2 நாட்டுத்துப்பாக்கி, 9 தோட்டாக்கள், 5 மங்கி குல்லா, 5 செட் கையுறை, வெல்டிங் மிஷின், கியாஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கியாஸ் கட்டர், ராடு, ஸ்குரு டைவர், கட்டிங் பிளேடு ஸ்பேனர், நைலான்பெல்ட், பெயிண்டிங் ஸ்பிரே, கன்டெய்னர் லாரி  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் அனைவரையும், ஊத்துக்குளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளயைடித்து காரில் கடத்தி சென்ற கொள்ளையர்கள், விஜயமங்கலம் சென்றதும், காரில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை கன்டெய்னர் லாரிக்கு மாற்றி எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது. 

Next Story