அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வேடத்தில் வலம் வந்து பணம் செல்போன் திருடிய திருநங்கை கைது


அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வேடத்தில் வலம் வந்து பணம் செல்போன் திருடிய திருநங்கை கைது
x
தினத்தந்தி 2 March 2021 7:33 PM GMT (Updated: 2 March 2021 7:49 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வேடத்தில் வலம் வந்து பணம், செல்போன் திருடிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் டாக்டர்கள் தங்கும் அறையில் வைத்திருந்த டாக்டர் பிரனேஷ் என்பவரது மடிக்கணினி திருட்டு போனது. அதுபோன்று நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர் களிடம் அடிக்கடி பணம் மற்றும் செல்போன்கள் திருடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  நீல நிற உடை மற்றும் முககவசம் அணிந்தபடி தன்னை டாக்டர் என்றுக்கூறி குழந்தைகள் வார்டுக்குள் ஒருவர் நுழைந்தார். பின்னர் அவர் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடினார். அத்துடன் சில நோயாளிகளிடம் பணமும் கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருநங்கை என்பதும், டாக்டர் போல வேடம் அணிந்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சாரங்கன் (வயது 23) என்பதும், சென்னையில் இருந்து தனது தோழியுடன் கோவை வந்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதும், அரசு ஆஸ்பத்திரிக்குள் வந்து டாக்டர் உடை மற்றும் ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றை திருடி டாக்டர் போல் வலம் வந்து செல்போன், பணத்தை திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை சாரங்கனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இது குறித்து போலீசார் கூறும்போது, அனாதையான சாரங்கன், சென்னையில் உள்ள ஒரு காப்பகத்தில் வளர்ந்து உள்ளார். 18 வயது முடிந்ததும் அந்த காப்பகத்தைவிட்டு வெளியே வந்த அவர் திருநங்கைகளுடன் தங்கி, பணம் வசூலித்து வந்துள்ளார். பின்னர்தான் அவர் திருட்டு தொழிலில் இறங்கி உள்ளார். எனவே  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். 


Next Story