ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு


ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு
x
தினத்தந்தி 2 March 2021 7:42 PM GMT (Updated: 2 March 2021 7:42 PM GMT)

மதுரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,மார்ச்
மதுரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 பேர் கொலை
மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
 இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலாளர் வீரணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதே வழக்கில் வரிச்சியூரைச் சேர்ந்த செந்தில், குன்னத்தூர் பாலகுரு ஆகியோர் கைதாகி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிப்பு
ஆனால் முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி, வீரணன் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுசம்பந்தமாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை. எனவே கிருஷ்ணராஜன், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
உத்தரவு
இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, குன்னத்தூர் இரட்டைக்கொலை வழக்கின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி ஊமச்சிகுளம் சரக போலீஸ் டி.எஸ்.பி.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விசாரணையை ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story