ஓராண்டுக்கு பின்னர் வாரச்சந்தை தொடங்கியது


ஓராண்டுக்கு பின்னர் வாரச்சந்தை தொடங்கியது
x
தினத்தந்தி 2 March 2021 7:46 PM GMT (Updated: 2 March 2021 7:46 PM GMT)

ஆண்டிமடத்தில் ஓராண்டுக்கு பின்னர் வாரச்சந்தை தொடங்கி நடைபெற்றது.

ஆண்டிமடம்:

வாரச்சந்தை
அரியலூர் மாவட்டம்‌ ஆண்டிமடம் பகுதியில் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. பின்னர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வாரச்சந்தைகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுடன் பல ஊர்களில் வாரச்சந்தை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய வாரச்சந்தை ஏல குத்தகை நடைபெறாததால், ஆண்டிமடத்தில் காய்கறி வாரச்சந்தை நடைபெறவில்லை. ஆனால் தற்காலிகமாக விளந்தை மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு சில கடைகளுடன் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் வாரச்சந்தை ஏல குத்தகை அறிவிக்கப்பட்டு வாரச்சந்தை குத்தகைக்கு விடப்பட்டது.
விலை குறைவாக...
இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு பின்னர் ஆண்டிமடத்தில் நேற்று காலை வாரச்சந்தை தொடங்கி நடைபெற்றது. வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிக வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வந்து இறக்கி வியாபாரத்தை ஆர்வமுடன் தொடங்கினர். பொதுமக்கள் ஆர்வத்துடன் சந்தைக்கு வந்து காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் பல்வேறு வியாபாரிகள் சரக்கு வாகனத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு கிராமந்தோறும் சென்று வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அவர்களுக்கு வாகனம் மற்றும் கூலி ஆட்கள் சம்பளம் என அதிக செலவு ஆனதால் காய்கறி விலை ஏற்றமாக இருந்தது. தற்போது வாரச்சந்தை தொடங்கியதால் பொதுமக்களுக்கு பசுமையான காய்கறிகளை விலை குறைவாக எங்களால் தரமுடியும், என்றார்.

Next Story