தேர்தலில் அச்சமின்றி பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் 2 வது நாளாக துணை ராணுவம் கொடி அணிவகுப்பு


தேர்தலில் அச்சமின்றி பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் 2 வது நாளாக துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 March 2021 7:51 PM GMT (Updated: 2 March 2021 7:53 PM GMT)

தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதற்காக கோவையில் 2-வது நாளாக துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

கோவை,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்) கோவைக்கு வந்து உள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் தேர்தல் அச்சத்தை போக்கவும், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பை நடத்தி வருகினறனர். 

கோவையில் உள்ள ரத்தினபுரி, கண்ணப்பநகரில் இருந்து தயிர் இட்டேரியில் உள்ள புதுப்பாலம் வரையும் ரத்தினபுரி ஆறுமுனை சந்திப்பு பகுதியில் இருந்து ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் வரையிலும் நேற்று முன்தினம் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

இந்த நிலையில்  2-வது நாளாக கொடி அணிவகுப்பை நகர ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து நடத்தினர். இந்த அணிவகுப்பு லட்சுமி மில் சிக்னலில் இருந்து புறப்பட்டு பூ மார்க்கெட் வரையும், பூ மார்க்கெட்டில் இருந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் வரையிலும் நடந்தது. 

இதேபோல் சுந்தராபுரம், சாரமேடு பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்புக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமை தாங்கினார். மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

60 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நகர ஆயுதப்படை போலீசார் உள்பட 187 பேர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.


Next Story